700 கோடி வர்த்தகம்; 6,000 பேருக்கு வேலை! – 10 லட்சம் மரங்களை வளர்த்த தொழிலதிபர் சிவராம்
Speaker
உலகின் புகழ்பெற்ற ஜவுளி நகரங்களில் ஒன்றான திருப்பூர் அடர்ந்த மரங்கள் நிறைந்த பெருவனமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்தத் தொழில் நகரத்தின் சாலையோரங்களில் நிழல்தரும் மரங்கள், காலியிடங்களில் மரம் வளர்ப்பு என சேவைப் பணியில் `வெற்றி தன்னார்வ தொண்டு நிறுவனம்’ ஓய்வின்றி உழைத்துவருகிறது.
இன்றுவரையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 10 லட்சத்து 50,000 மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார்கள். இது ஏதோ புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் காரியமாக இதை இவர்கள் செய்யவில்லை. நட்டு அத்தனை மரங்களையும் வளர்த்து வருகிறார்கள்.
இதற்கெல்லாம் ஆணிவேராக இருப்பவர் கிளாசிக் போலோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவராம். அவர்தான் வெற்றி தொண்டு நிறுவனத் தலைவர்.
மரம் நடுவதல்ல வளர்ப்பதே நோக்கம் :
தன் பரபரப்பான பணிகளுக்கு இடையில் அவர், சமூக அக்கறையுடன் மரம் வளர்ப்புப் பணிகள் பற்றி மனந்திறந்து பேசினார். “எங்களுடைய அமைப்புக்கு 20 வயது.
இயற்கை மற்றும் சுற்றுச்சூழலைப் பேணிக் காப்பதில் திருப்பூர் பகுதியில் எங்களால் முடிந்த முயற்சிகளைச் செய்துவருகிறோம். 2001 முதல் 2010 வரையில் சாலையோரங்களில் மரங்கள் நட்டு வலைக்கூண்டு வைத்துப் பராமரித்துவந்தோம்.
வெறும் மரங்களை மட்டும் நட்டு போட்டோ எடுப்பது எங்கள் வேலையல்ல. 2001 – 2008 காலகட்டத்தில் 25,000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்திருக்கிறோம். நாங்கள் அப்துல்கலாம் அய்யாவின் தீவிர ரசிகர்கள்.
வெற்றி அமைப்பின் கனவுகள் பெரிது. பலருடைய கருணையால் பெரும் காரியங்களைச் செயல்படுத்தி வருகிறோம்” என்று கனிவான குரலில் பேசத் தொடங்கினார்.
தூர்வாரப்பட்ட 60 ஏக்கர் ஏரி :\
திருப்பூருக்கு அருகிலுள்ள ஆண்டிப்பாளையம் கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பில் ஒரு ஏரி இருக்கிறது. 1984க்குப் பிறகு அங்கு தண்ணீரே வருவதில்லை. நொய்யல் ஆற்றின் கரையிலிருந்த அணைக்கட்டு தூர்ந்துபோனதால் தண்ணீர் தடைப்பட்டது.
இதுபற்றி கவனம் கொண்ட வெற்றி அமைப்பு ஏரியைப் புனரமைக்கும் பணியில் இறங்கியது.கடந்த 2004இல் நமக்கு நாமே திட்டம் மூலம் பொதுப்பணித்துறையில் அனுமதி வாங்கி, சிதைந்த அணைக்கட்டைக் கட்டிமுடித்தார்கள்.
2005 முதல் இன்று வரையில் 60 ஏக்கர் ஏரியில் தண்ணீர் நிரம்பத் தொடங்கிவிட்டது. பின்னர் 5 ஏக்கருக்கு வாய்க்காலையும் தூர்வாரி பராமரித்தார்கள். திருப்பூரில் ஒரு காலத்தில் 1200 அடி தோண்டினால்தான் நீரைப் பார்க்கலாம் என்ற நிலை இருந்தது.
ஏரியில் நீர் தேங்கிய பிறகு 250 அடியிலேயே சுவையான நீர் கிடைக்கிறது. ஏரியைச் சுற்றி 10 கிமீ சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு நல்ல பலன். வெற்றி அமைப்பு செய்த சுற்றுச்சூழல் பணிகளின் பட்டியல் எல்லையற்றதாக நீள்கிறது.
அரசுப் பள்ளிக்கு 8 ஏக்கரில் புதிய கட்டடம் :
மரம் வளர்ப்பையும் தாண்டி இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 8 ஏக்கரில் இடம் வாங்கி 2.5 கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்டிக்கொடுத்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் சிவராம்.
“இங்கு வகுப்பறை இல்லாமல் குழந்தைகள் மரத்தடியில் அமர்ந்து படித்தார்கள். 700 பிள்ளைகளுக்கு வகுப்பறைகளே இல்லை. கழிப்பிட வசதியில்லை. என்ன செய்வது என நண்பர்களுடன் ஆலோசித்தேன். முதல்கட்டமாகச் சென்னை சில்க்ஸ் டிரஸ்ட் மூலம் 8 ஏக்கர் நிலத்தை வாங்கி பள்ளிக்கல்வித் துறையிடம் ஒப்படைத்தோம்.
ஒவ்வொரு வகுப்பறையையும் கட்டுவதற்கு 6 லட்சம் ரூபாய் மதிப்பீடு. யாரிடமும் நிதியாகப் பெறாமல் அதற்கு இணையான கம்பி, மணல், சிமென்ட், ஜல்லி, செங்கல் எனப் பொருட்களாக வாங்கினோம். உதவி செய்தவர்களுக்கு நன்றிக்கடனாக ஒன்றைச் செய்தோம்.
24 வகுப்பறைகள், ரூ. 2.5 கோடி செலவு :
பள்ளி வகுப்பறையில் உதவியவர்களின் நிறுவனப் பெயரோ அல்லது பெற்றோர், குழந்தைகள் பெயரோ, குலதெய்வம் பெயரோ எதையும் வைக்கலாம். காலமெல்லாம் நிலைத்து நிற்கும்படி உங்கள் நினைவாக ஒரு கல்வெட்டு நிறுவப்படும் என்றோம். அது எல்லோருக்கும் பிடித்திருந்தது.
24 வகுப்பறைகள், மாணவ மாணவிகளுக்குத் தனித் தனி கழிப்பிடங்கள், சத்துணவுக்கூடம் ஆகியவற்றை ரூ. 2.5 கோடி செலவில் கட்டி அரசிடம் ஒப்படைத்தோம். இன்று பள்ளியில் 3100 குழந்தைகள் படித்துவருகிறார்கள்.
இந்தப் பணி எங்களுக்கு மிகவும் மனத்திருப்தி அளித்ததாக இருந்தது” என்று உதவியின் பயனில் மகிழ்ந்து பேசுகிறார்.
மரங்கள் விதைக்கப்படும் நாள் :
2015 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைந்தபோது, திருப்பூரில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் தலைமையில் நினைவஞ்சலி கூட்டம். அன்று பேசியவர்கள், கலாம் கனவுகண்ட ஒரு நல்ல விஷயத்தையாவது நாம் செய்ய வேண்டும் என்று கூறி அஞ்சலி செலுத்தினார்கள்.
அந்தக் கூட்டத்தில் பேசிய சிவராம், மெழுகுவத்தி ஏந்துவதோ, பேனர் வைப்பதோ, சுவரொட்டி அடிப்பதோ அவருக்குப் பிடிக்காது. கலாம் அய்யாவின் பத்து உறுதிமொழிகளில் ஒன்றையாவது நாம் செயல்படுத்தினால், அதுதான் அவருக்குச் செலுத்துகிற நினைவஞ்சலியாக இருக்கும் என்ற கருத்தை முன்வைத்தார்.
அன்று பிறந்ததுதான் வனத்துக்குள் திருப்பூர் மரம் வளர்ப்புத் திட்டம். மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துக்கொடுக்கும் இலட்சியம். இந்தத் திட்டத்தை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்கள்.
இப்படித்தான் பேய்க்கரும்பு கிராமத்தில் கலாம் புதைக்கப்பட்ட நாளான ஜூலை 30, 2015 திருப்பூர் மாவட்டத்தில் மரம் விதைக்கப்படும் நாளாக மாறியது.
வனத்துக்குள் திருப்பூர் திட்டம் :
அடுத்து வனத்துக்குள் திருப்பூர் திட்டம் வெற்றியடைந்த கதையை விவரித்தார் சிவராம், “சாலையோரங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பது கடினமான பணியாக இருந்தது.
திருப்பூர் மாவட்டத்திலிருந்த விவசாயக் காலி இடங்களைப் பயன்படுத்த ஓர் அறிவிப்பைச் செய்தோம்.
ஆடு மாடு மேயாமல் இருப்பதற்கு வேலி இருக்க வேண்டும் என்பதுதான் முதல் விதிமுறை. மரத்தை வைத்து இரண்டு ஆண்டுகள் தண்ணீர் ஊற்றி வளர்த்துக்கொடுப்போம். பிறகு அந்த விவசாயி பராமரிக்க வேண்டும். நான்கு மாதங்களில் ஒரு லட்சம் மரங்கள் வைக்க வேண்டும் என்று நினைத்தோம்.
மிகப்பெரிய வரவேற்பு. 90 நாட்களில் ஒன்றே கால் லட்சம் மரங்களை நட்டுவிட்டோம். அதற்கு ஒரு வெற்றி விழா நடத்தினோம். அப்போது பேசியவர்கள், மரம் நடுவதற்கு எதற்கு நிறைவு விழா. நல்ல குழு இருக்கும்போது மரம் வளர்ப்பைத் தொடரலாமே என்றார்கள்.
10 லட்சத்து 50,000 மரங்கள் :
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் 2,3,4,5 என ஆறு அத்தியாயங்களை நிறைவு செய்திருக்கிறோம். இன்றுவரையில் மாவட்டம் முழுவதும் 10 லட்சத்து 50,000 மரங்களை நட்டு வளர்த்திருக்கிறோம்.
மரத்தின் பலன்கள் எல்லாம் விவசாயிகளுக்குச் சொந்தம். காற்றும் மழையும் சமூகத்துச் சொந்தம். இப்போது மாவட்டத்தின் மழை அளவும் ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே இருக்கிறது” என்று நிறைந்த மனத்துடன் விவரித்தார்.
வனத்துக்குள் திருப்பூர் மரம் வளர்ப்புத் திட்டத்துக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவாகிறது. ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஜூன் 15 ஆம் தேதியன்று ஏழாவது ஆண்டு மரம் நடும் பணிகளைத் தொடங்கப்போகிறது வெற்றி அமைப்பு. ஜூன் 15 தொடங்கி டிசம்பர் 15 அன்று வரை இவர்களது மரம் நடும் காலம்.
250 தன்னார்வலர்கள் :
2021 ஆம் ஆண்டுக்கான நாற்றுப்பண்ணைப் பணிகளும் தொடங்கிவிட்டன. அதனை நீதியரசர் கிருபாகரன் தொடங்கிவைத்தார். ஆண்டுக்கு 2 லட்சம் மரங்களைத் தொடர்ந்து வளர்த்துவருகிறார்கள்.
மரம் வளர்ப்பு களப்பணிகளில் மாவட்டத்தில் 250 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அதில் 70 சதவிகிதம் பேர் இளைஞர்கள்.“எங்கள் தாத்தா காலத்தில் கொடுத்த இயற்கை செல்வத்தைப் பேரன் பேத்திகளுக்குக் கொடுத்துவிட்டுப் போக வேண்டும் என்று செயலாற்றிவருகிறோம்.
தொழில் நகரம் என்ற பெயரில் திருப்பூரில் நிறைய அழித்துவிட்டோம். அதை மெல்ல மீட்டெடுத்துவருகிறோம்” என்கிறார்.
கிளாசிக் போலோ நிறுவனம் :
மரம் வளர்ப்புப் பணிகளைப் பற்றிப் பேசிய அதே நேரத்தில் அவருக்குச் சொந்தமான கிளாசிக் போலோ நிறுவனத்தின் வளர்ச்சி பற்றியும் பேசினார் சிவராம்.
“பிறந்தது வளர்ந்தது திருப்பூர். நான் 9 ஆம் வகுப்புப் படிக்கும்போதே அப்பா தவறிவிட்டார். எனது 19 வயதில் தொழிலுக்கு வந்தேன். இன்று கிளாசிக் போலோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருக்கிறேன்.
மூன்று சகோதரர்கள் சேர்ந்து 1991 ஆம் ஆண்டு தொழில் தொடங்கினோம். என் சகோதரர்களில் ஒருவர் மறைந்துவிட்டார். பெரியவர் கோபாலகிருஷணன், அவர்தான் கிளாசிக் போலோ நிறுவனத் தலைவர்.
அதிநவீன சர்வதேச தொழில்நுட்பத்தில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளோம். வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில்தான் தொடங்கினோம். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைப்பு. இப்போது சற்று குறைந்து 12 மணி நேரமாக ஆகியிருக்கிறது.
ரூ. 700 கோடி ஆண்டு வர்த்தகம் :
காட்டன் டு கார்மெண்ட்ஸ் என்பதுதான் கிளாசிக் போலோ நிறுவனத்தின் மந்திரம். லாபமோ நஷ்டமோ தரத்தைக் குறைப்பதில்லை. நல்ல பணியாளர்கள். ஒருநாள்கூட எங்கள் நிறுவனத்தில் வேலைநிறுத்தமோ, போராட்டமோ நடந்ததில்லை.
முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்களது நிறுவனத்தின் ஆண்டு வர்த்தகம் ரூ.700 கோடியாக இருக்கிறது. இங்கு 6,000 பேர் வேலை செய்கிறார்கள். கிளாசிக் போலோ ஆடைகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் விற்பனையாகி வருகின்றன. ஏற்றுமதிதான் எங்களது முதன்மையான வணிகமாக உள்ளது” என்றார்.
நேரம் எப்படி கிடைக்கிறது
“ஒரு வியாபாரிக்குப் பணம் என்பது எல்லையில்லாதது. நீங்கள் ஓர் இலக்கை அடைந்தால், உடனே அதை மாற்றிவிடுவீர்கள். முதல் பத்து ஆண்டுகளில் தொழிலில் தன்னிறைவை அடைந்துவிட்டோம். நாம் கேட்டதற்கு மேலே கடவுள் கொடுத்திருக்கிறார்.
சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை வந்தது. சம்பாதிப்பதில் 10 சதவிகிதத்தை சமூகப் பணிகளுக்காக ஆண்டுதோறும் செலவிட்டுவருகிறோம்” என்று வெகு இயல்பாகச் சொல்லிமுடித்தார் சிவராம்.
-சுந்தரபுத்தன்
Published: Mar 29, 2021