பசுமைக்குடிலில் இயற்கை விவசாயம்! நாங்கள் கற்ற பாடங்கள்!
அனுபவம் | ஆர்.குமரேசன் | 25.11.2021
இயற்கை விவசாயத்தைத் திறந்த வெளி நிலங்களில் செய்யலாம். ஆனால்,பாலி ஹவுஸ் எனப்படும் பசுமைக்குடிலுக்குள் இயற்கை விவசாயம் செய்வது கடினம் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. ஆனால், அது உண்மையல்ல; பசுமைக் குடிலுக்குள்ளும் இயற்கை விவசாயம் சாத்தியம்’ என நிரூபித்துவருகிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராம்.
திருப்பூர்-மங்களம் சாலையில் உள்ள பள்ளி அருகே இருக்கிறது கிளாசிக் கார்டன்.பசுமை விகடன் மற்றும் அறப்பொருள் வேளாணகம் இணைந்து நடத்திய இயற்கை விவசாயத்தில் வெற்றி பெறும் வழிகள்’ களப்பயிற்சியின் போது, விவசாயிகள் பசுமைக்குடிலைப் பார்வையிட்டார்கள். இயற்கை விவசாயத்தில் காலிஃப்ளவர் சாகுபடி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
பசுமைக்குடிலில் இயற்கை வழி வேளாண்மை சாத்தியமான முறைகள் குறித்து அறப்பொருள் வேளாணகம் நிறுவனர் சிவராமிடம் பேசினோம். இயற்கை விவசாயம் மட்டுமே நோயில்லா வாழ்வைத் தரும்னு நான் உறுதியா நம்புறேன். இயற்கை விவசாயப் பொருள்களை எல்லோரும் பயன்படுத்தும்போது இத்தனை மருத்துவமனைகள் நமக்குத் தேவைப்படாது. இயற்கை வழி வேளாண்மையை நம்மால முடிஞ்ச வரைக்கும் சமூகத்துக்குப் பரப்பலாம்னு தான் அறப்பொருள் வேளாணகம் தொடங்குனோம். ஆடு, மாடு, கோழி, மீன், காய்கறி விவசாயம்னு ஒருங்கிணைந்த பண்ணையமா அதைச் செயல்படுத்திக்கிட்டு இருக்கோம். அதே நேரத்துல பசுமைக்குடில் விவசாயமும் செய்யலாம்னு நினைச்சோம்.
செலவைக் குறைக்க பழசு போதும்…
அரை ஏக்கர் (22,000 சதுர அடி ) நிலத்துல பசுமைக்குடில் அமைக்க முடிவு செஞ்சோம். அதுக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் ஆகும்னு சொன்னாங்க. எங்களுக்கும் பசுமைக்குடில் விவசாயத்துல அனுபவம் இல்ல. அதனால புதுசா போடாம, ஏற்கெனவே பயன்படுத்தி விற்பனைக்கு இருக்கப் பசுமைக்குடில் அமைப்பை விலைக்கு வாங்கலாம்னு முடிவு பண்ணுனோம். அந்த நேரத்துல
ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்துல கிருஷ்ணன் கோயில்ல ஏற்கெனவே வெள்ளரிச் சாகுபடி செஞ்ச பழைய பசுமைக்குடில் அமைப்பு ஒண்ணு விலைக்குக் கிடைச்சது. அதை வாங்கிட்டு வந்து கொஞ்சம் மராமத்துப் பண்ணி, இங்க பசுமைக்குடில் அமைச்சோம். அதுக்கு 11 லட்ச ரூபாய் வரைக்கும் செலவாச்சு. இது பல வருஷமா பயிர் செய்யாத நிலம். அதனால பசுமைக்குடில் அமைக்குறதுக்கு முன்னாடியே தேவையான தொழுவுரம் போட்டு, ரெண்டு மூணு உழவு பண்ணிட்டோம்.
பசுமைக்குடில் கிராமம்
ஓசூர் பகுதியில ஒரு கிராமம் முழுக்கப் பசுமைக்குடில் விவசாயம் செய்றாங்க. அங்க போய் என்னென்ன பயிர்களைப் பயிர் செய்யலாம்னு விசாரிச்சோம். வெள்ளரி, குடமிளகாய், ‘லெட்யூஷ்’ங்கிற சீனாவைச் சேர்ந்த பயிர், ரோஜா, கொய்மலர், காலிஃப்ளவர் என சாகுபடி செய்யலாம்னு சொன்னாங்க. ஆனா, அங்க பெரும்பாலும் ரசாயன விவசாயம்தான் செய்றாங்க”
பூச்சி, நோய் மேலாண்மை, உர மேலாண்மையை சரியா பண்ணுனா பசுமைக்குடில் நிச்சயம் லாபகரமானதுதான். இங்க பசுமைக்குடில் அமைச்சோம். அதுக்கு 11 லட்ச ரூபாய் வரைக்கும் செலவாச்சு, என்றவர் தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
வெட்டுக்கிளி தாக்குதல்
“நாங்க வெள்ளரி போடலாம்னு முடிவு பண்ணுனோம். ஏற்கெனவே பசுமைக்குடில்ல வேலைபார்த்த அனுபவமுள்ள முனியப்பன் என்ற நபரை வேலைக்கு வெச்சோம். வெள்ளரியில நாட்டு வெள்ளரி வேண்டாம்னு சொன்னாங்க. பிறகு, பசுமைக்குடிலுக்கு ஏற்ற ஒரு வீரிய ரக விதையை நிபுணர்கள் ஆலோசனைபடி விதைச்சோம். ஒரு விதையோட விலை 8 ரூபாய். எங்களுக்கு 4,000 விதைங்க தேவைப்பட்டுச்சு. செடி முளைக்கும்போது வெட்டுக்கிளி பிரச்னை வந்துச்சு. வெளிப்புறப் பூச்சி தாக்குதல் இல்லன்னாலும் அங்கிருக்கும் மண்ணுல இருந்து வந்த வெட்டுக்கிளிகள், இலையைச் சாப்பிட ஆரம்பிச்சது. அதுக்கு தலா ஒரு கிலோ இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை அரைச்சு,10 லிட்டர் மாட்டுச் சிறுநீர்ல கலந்துகிட்டோம். அந்தக் கரைசல்ல 3 லிட்டர் எடுத்து, 10 லிட்டர் தண்ணியில கலந்து தெளிச்சோம். நல்ல நெடி. அந்தக் கரைசலைத் தெளிச்ச பிறகு வெட்டுக்கிளி கட்டுக்குள்ள வந்துச்சு. நோய், வைரஸ் தொற்று, பூச்சித் தாக்குதல், நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு காரணமா பயிர் வளர்ச்சி குறைபாடுகளை இயற்கை விவசாயத்துல சரிசெய்றது கஷ்டம்னு சிலர் சொன்னாங்க. விளைச்சலே வரலைன்னாலும் பரவாயில்ல. இதை ஒரு அனுபவ பாடமா எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணுனேன். அதனால முழுக்க இயற்கை விவசாயத்துல தான் செய்யணும்னு உறுதியா இருந்தேன்.
ஜீவாமிர்தம், தேமோர் கரைசல், 3ஜி கரைசல் பயன்படுத்திச் சாகுபடியைத் தொடர்ந்து பண்ணுனோம்.
அரை ஏக்கர் 12 டன் மகசூல்
அரை ஏக்கர் பசுமைக்குடில்ல செயற்கை முறையில சுமார் 20 டன் வெள்ளரி மகசூல் எடுக்கலாம். எங்களுக்கு 12 டன்தான் மகசூல் கிடைச்சது. ஒரு கிலோ 20 ரூபாய்னு விலைக்குக் கொடுத்தோம். அது மூலமா 2,40,000 ரூபாய் கிடைச்சது. இயற்கை முறையில் செய்ய முடியாதுன்னு நிறைய எதிர்மறை கருத்துகள் இருந்தாலும், மகசூல் எடுத்த பிறகு, பசுமைக்குடில்ல இயற்கை வழி வேளாண்மையில இது சிறந்த விளைச்சல்னு நிபுணர்கள் சொன்னாங்க” என்றவர், இரண்டாவது சாகுபடியைப் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
3ஜி கரைசல் + கற்பூரம்,
வேப்ப எண்ணெய்க் கரைசல்
“அடுத்து வேற பயிர் நடவு செய்யலாம்னு நினைச்சோம். ஆனா, ஒரு சில காரணங்களால மறுபடியும் வெள்ளரி போட்டோம். இந்தத் தடவை அசுவினி தாக்குதல் அதிகம். முதல் தடவை கிடைச்ச அனுபவம் மூலமா வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்த அது வர்றதுக்கு முன்னாடியே 3 ஜி கரைசலோட கற்பூரம், வேப்ப எண்ணெய் சேர்த்துக்கிட்டோம். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூணையும் தலா அரைக்கிலோ எடுத்துக்கிட்டோம். அதுல 100 மி.லி வேப்ப எண்ணெய், 50 கிராம் கற்பூரம் சேர்த்து கலக்கி, அடுப்பு வெச்சு சூடு பண்ணுனோம். இந்தத் தடவை மாட்டுச் சிறுநீர் சேர்க்கல. சூடுபடுத்திய பிறகு அதை ஆறவெச்சு, வடிச்சு, அதுல இருந்து 1 லிட்டர் எடுத்து 10 லிட்டர் தண்ணியில கலந்து தெளிச்சோம். தொடர்ந்து 3 நாள்கள் இதை அடிச்சோம். பசுமைக் குடிலுக்குள்ள போயிட்டு வெளியே வந்தா உடல் எரியுற அளவுக்கு நெடி இருந்தது. அதனால வெட்டுக்கிளியோட, அசுவினியும் இல்லாமப் போயிடுச்சு.
இடைவெளி அவசியம்
விதை அளவையும் ரெண்டாவது தடவை குறைச்சிட்டோம். முதல் தடவை அதிக விதை போட்டதால செடிகளுக்குப் போதுமான இடைவெளி இல்லாமப் போச்சு. அதனால எதிர்பார்த்த மகசூல் கிடைக்கல. அதனால ரெண்டாவது தடவை போதுமான இடைவெளி கொடுத்து விதைகளை நடவு செஞ்சோம். முதல் தடவை வெள்ளரிச் செடியில நூற்புழுப் பிரச்னை வந்துச்சு. செடியோட வேர்ப்பகுதி மொட்டு மொட்டாப் பெருத்து குண்டு குண்டா இருக்கும். அதனால செடியோட வளர்ச்சி குறைஞ்சது. அது பூ, காய் எதுவும் இல்லாம செடியை மலடாக்கிடும். அந்தச் செடியை உடனடியாக அப்புறப்படுத்திடணும். இல்லைன்னா அடுத்த செடிகளுக்கும் பரவிடும்.
முதல் தடவை மகசூல் முடியுற நேரத்துல ஒரு சில செடிகள்லதான் நூற்புழுத் தாக்குதல் இருந்துச்சு. ஆனா, ரெண்டாவது தடவை நூற்புழுத் தாக்குதல் அதிகமா இருக்கும்னு ஓசூர் விவசாயிங்க சொன்னாங்க.
வேர்புழுவைத் தடுக்கும் செண்டுமல்லி
அதனால ஆரம்பத்துல இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையில இறங்கிட்டோம். ‘நடவுக்கு முன்னாடியே நரிப்பயிறு, உளுந்து, சணப்பை மாதிரியான வேர்ல ‘ரைசோபியம்’ அதிகமா இருக்கப் பயிர்களை விளைய வெச்சு, மடக்கி உழுதுட்டு, பிறகு நடவு செய்றதுதான் நல்லது’னு சொன்னாங்க. ஆனா, அதுக்கான கால இடைவெளி இல்ல. அதனால் விதையை நடவு பண்ணிட்டோம்.
இந்தத் தடவை 2,000 விதைகள் மட்டுமே விதைச்சோம். நூற்புழு வராம தடுக்கவும். வந்தாலும் அடுத்த செடிகளுக்குப் பரவாம தடுக்கவும் செண்டுமல்லிச் செடியை இடையிடையே நடவு பண்ணுனோம். செண்டுமல்லிச் செடியோட வேர்கள் பரந்து இருக்கும். அதனால வெள்ளரியில் வர்ற நூற்புழுவை, அடுத்த வேருக்குப் பரவ விடாது.
ரெண்டாவது தடவை முன்னாடியே பூச்சி விரட்டிக் கொடுத்ததால் வெள்ளை ஈ, வெட்டுக் கிளி பிரச்னை இல்ல. ஆனால் செம்பேன். வெள்ளைப்பேன் பிரச்னை இருந்துச்சு. அதுக்கும் 3ஜி கரைசலோடு கற்பூரம், வேப்ப எண்ணெய்க் கரைசல் கொடுத்தோம். செம்பேன், வெள்ளைப்பேன் கட்டுப்பாட்டுக்கு வந்துச்சு. இதைத் தொடர்ந்து கொடுத்தா பூச்சி பிரச்னை வராதுனு தெரிஞ்சுகிட்டோம். இப்ப அதைத்தான் தொடர்ந்து பயன்படுத்திக்கிட்டு வர்றோம்.
பூக்கள் அதிகம் பூப்பதற்காகக் கொடுக்கும் தேமோர் கரைசல், புளித்த மோர் போன்றவை செடியின் வளர்ச்சிக்கும் உதவி, வளர்ச்சியைப் பாதிக்கும் காரணங்களையும் மட்டுப்படுத்தியது.
இருமுறை விளைச்சல் ஒப்பீடு
முதல் தடவை 40-வது நாள்ல அறுவடை ஆரம்பிச்சது. ஆனா, ரெண்டாவது தடவை 45 நாள்கள் ஆயிடுச்சு. காரணம், எதிர்பார்த்த சீதோஷ்ண நிலை இல்லாம, குறைவான வெயில், மேகமூட்டம் ஒரு காரணம். தொடர்ந்து வெள்ளரி பயிரிட்டதும்கூட தாமதமானதுக்கு ஒரு காரணமா இருக்கலாம். இதைப் பசுமைக்குடில் விவசாயிகள் கவனத்துல வெச்சுக்கணும். ரெண்டாவது தடவை எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் செஞ்சதால, முதல் தடவை எடுத்த மகசூலைவிட 2 டன் அதிகமா எடுக்க முடியும்னு நினைச்சோம். ஆனா. அறுவடை ஆரம்பிச்ச நேரம், கோவிட் பொது முடக்கம் ஆகிடுச்சு. வேலையாளுங்க ஊருக்குப் போயிட்டாங்க. சரியா காய் எடுக்க முடியல. விற்பனையிலயும் சுணக்கம். அதனால் காய்கள் தேங்கிடுச்சு. வியாபாரிகளும் காய் எடுக்க வரல.. அதனால் முறையா அறுவடை செய்யல. இருந்தாலும் இயற்கை முறையில விளையுற வெள்ளரினால சில இடங்கள்ல நல்ல வரவேற்பு இருந்துச்சு. இந்த மாதிரி காரணங்களால் 10 டன் தான் மகசூல் கிடைச்சது. இந்தத் தடவையும் கிலோ 20 ரூபாய் விலையிலதான் கொடுத்தோம்.
இயற்கை முறையில் விளைஞ்ச வெள்ளரியில் சுவை கொஞ்சம் அதிகம். அப்பப்ப பால் தெளிச்சா வெள்ளரியில் இனிப்புச் சுவை கூடும்னு சொன்னாங்க. சோதனை அடிப்படையில ஒரு தடவை 5 லிட்டர் பால்ல 5 லிட்டர் தண்ணி கலந்து தெளிச்சோம். அதைச் செஞ்ச பிறகு சுவையில நல்ல மாற்ற தெரிஞ்சது. முறையான காய் பறிப்பு இல்லாததால சீக்கிரமே செடிகளை அழிச்சிட்டோம்” என்றவர் தற்போதைய விவசாயமான காலிஃப்ளவர் பற்றிப் பேசினார்.
காலிஃப்ளவர்
வெள்ளரியைச் சுத்தம் பண்ணிட்டு அடுத்த சாகுபடி காலிஃப்ளவர் பண்ணலாம்னு முடிவு பண்ணுனோம். காலிஃப்ளவர் 60 நாள்ல அறுவடைக்கு வந்திடும். அதனால நாற்று வாங்கிட்டு வந்து நடவு பண்ணுனோம். தொடர்ந்து பராமரிச்சிட்டு வந்தோம்.
காலிஃப்ளவர்ல வெட்டுக்கிளி தாக்குதல் அதிகமா இருந்துச்சு. இருந்தாலும் வளர்ச்சி நல்லா இருந்துச்சு. ஆனா, பூக்குற நேரத்துல வைரஸ் தொற்றுனால இலை கருக ஆரம்பிச்சது. நாங்க ஏற்கெனவே செஞ்ச இயற்கை நுண்ணூட்ட முறைகள்ல, தேவையான பொருள்கள்ல இருந்து
பராமரிப்பு
பசுமைக்குடிலில் இயற்கை விவசாயம் குறித்துப் பேசிய அறப்பொருள் வேளாணகம் பண்ணை மேலாளர் பிரபு, “திறந்தவெளி விவசாயத்தைவிட இதுல தட்ப வெப்பம், சீதோஷ்ண நிலையை ஓரளவுக்குப் பராமரிக்கலாம். முழுக்க வலைக்குள்ள இருக்குறதால வெளிப்புற பூச்சித் தாக்குதல் பெரும்பாலும் இருக்காது தொடர்மழை காரணமா தக்காளி மாதிரியான காய்கள் அழுகுறது தடுக்கப்படும் கொடி வகைக் காய்களான கொடித் தக்காளி, பீன்ஸ் மாதிரியான செடி வகைக் காய்களைச் சாகுபடி செய்யலாம். களை கட்டுப்பாடு ரொம்ப சுலபம்.
பசுமைக்குடில்ல சாகுபடி பண்ண, தன் மகரந்தச் சேர்க்கை பயிர்களைத்தான் தேர்ந்தெடுக்கனும். அயல் மகரந்தச் சேர்க்கை பயிர்களைத் தேர்வு செய்தா, மகரந்தத்தைப் பரப்பும் தேனீக்கள் பசுமைக்குடிலுக்குள்ள இருக்காது. அதனால மகசூல் பாதிக்கப்படும்.
கால்சியம் குறைபாடு காரணமா வெள்ளரிக்காய் வளைஞ்சு போகும் அதைச் சரிசெய்ய 50 லிட்டர் தண்ணியில 5 கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பை கரைச்சு, தெளிய வெச்சு கொடுக்கலாம்.
ஒரு பாதிப்பு ஏற்பட்டா அது மற்ற பயிர்களுக்குப் பரவத் திறந்த வெளியில் 10 நாள் ஆகும்னர, பசுமைக்குடில்ல 2 நாள்ல பரவிடும். அதனால் தினமும் கண்காணிப்பு இருந்துகிட்டே இருக்கணும்” என்றார்.
சாறெடுத்து பயன்படுத்தலாம்னு அந்தச் சமயத்தில் உயிர் உரங்கள் துறையில் வேலைக்கு வந்தவரு சொன்னாரு. அவர் சொல்லியதைப் பயன்படுத்தின பிறகு, இலை கருகல் ஓரளவு கட்டுக்குள் வந்துச்சு. அவர் சொன்ன முறையை இப்போ திறந்தவெளி விவசாயத்திலும் பயன்படுத்துறோம்.
காலிஃப்ளவர் பூ பூப்பதற்கு தேமோர் கரைசல் கொடுத்தோம். சூடோமோனாஸ் கொடுத்தோம். சில மாற்றங்கள் தெரிஞ்சது. ஆனால், இலைக் கருகல் மாறல. ஆனா, செடி வளர்ச்சி சீராகி, பூ பூக்க ஆரம்பிச்சது. 4,000 செடிகள் வெச்சோம். இந்தத் தடவையும் நாங்க செஞ்ச தவறு போதுமான இடைவெளி கொடுக்காததுதான். இலைக்கருகலுக்கு அதுவும் ஒரு காரணம்னு சொன்னாங்க.
பொதுவா காலிஃப்ளவர்ல புழு அதிகமா வரும். ரசாயன மருந்தால மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும்னு ஒரு கருத்து இருக்கு. ஆனா, பசுமைக்குடில்ல எந்த விதமான ரசாயனமும் இல்லாம பூ நல்லா வந்துச்சு.. ஆனா. பூவோட நிறம் மட்டும் பளிச்சுன்னு இல்லாம் கொஞ்சம் வெள்ளை நிறம் குறைஞ்சு இருந்துச்சு. ஆனா, சுவை குறையல.நேரடி விற்பனையில இறங்கிட்டோம்.
கடைகள்ல விற்பனையாகுற விலைக்கே கொடுத்தோம். ஒரு பூ 25 ரூபாய் விலையில் கொடுத்தோம். இயற்கை முறையில விளைவிக்கப்பட்டதால் விரும்பி வாங்கு றாங்க. மொத்தம் நடவு பண்ணுன 4,000 செடிகள்ல இருந்து 3,800 பூ பறிச்சிருப்போம். அது மூலமா 95.000 ரூபாய் வருமானம் கிடைச்சது. இதுல செலவு இருக்கு. எங்களுக்கு லாபம் இதுவரைக்கும் வரல. ஆனா, நல்ல அனுபவம் கிடைச்சிருக்கு. அதைவிட முக்கியம் பசுமைக்குடில்ல இயற்கை விவசா யத்துல பொருள்களை விளைய வைக்க முடியும்னு நிரூபிச்சிருக்கோம். அடுத்தடுத்த வருஷங்கள்ல லாபம் எடுத்திடுவோம்’ என்றவர் நிறைவாக,
“பசுமைக்குடில் நஷ்டம்னு சொல்றது, அவங்கவங்க பராமரிப்பு, கவனிப்பைப் பொறுத்த விஷயம். முறையா கவனிச்சு, பூச்சி, நோய் மேலாண்மை, உர மேலாண்மையை சரியா பண்ணுனா பசுமைக்குடில் நிச்சயம் லாபகரமானதுதான்” என்று சொல்லி முடித்தார்.
பயிற்சி
இயற்கை விவசாயத்தில் வெற்றி ‘பெறும் வழிகள்’ என்ற தலைப்பில் நேரடி களப்பயிற்சி திருப்பூரில் நடைபெற்றது. அக்டோபர் 23 மற்றும் 24-ம் தேதிகளில் திருப்பூர் அறப்பொருள் வேளாணகம் பண்ணையில் நடைபெற்ற களப்பயிற்சியைப் பசுமை விகடன் மற்றும் அறப்பொருள் வேளாணகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் வனிதா, “இன்றைக்கு அவசர காலத்தில் வாழ்ந்து வருகிறோம். உடல் ஆரோக்கியம் தொடர்பான பல சிக்கலுக்கும் காரணம் நாம் பாரம்பர்யத்தை மறந்து போனதுதான் ஆரோக்கியமான உணவுகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய நாம். இன்றைக்கு நாகரிகம் என்ற பெயரில் இறக்குமதி உணவுகளை உண்டு, நோயாளிகளாக அலைகிறோம். அதனால் முடிந்த வரை பாரம்பர்யத்தைக் காப்பாற்ற வேண்டும். இயற்கை விவசாயத்தை அனைவரும் கைக்கொள்ள வேண்டும். அது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்துக்கும் உதவியாக இருக்கும். தற்போது நாம் வாழவில்லை. பிழைத்துக் கொண்டிருக்கிறோம். இயற்கை சார்ந்த வாழ்க்கையைக் கடைப்பிடிக்கும்போது தான் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கும்” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அறப்பொருள் வேளாணகத்தின் நிறுவனர் சிவராம். “இயற்கை விவசாயத்தைப் படித்து, கேட்டுத் தெரிந்து கொள்வதோடு களத்தில் இறங்கிச் செயல்படும்போதுதான் முழுமையான வெற்றி பெற முடியும். அதற்காகத் தான் இந்தக் களப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைசிறந்த வல்லுநர்கள் பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். இதை அனைவரும்
பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். மரம் வளர்ப்பு குறித்து தமிழ்நாடு வனக் கல்லூரியின் மரச்சாகுபடி துறையின் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன். பாரம்பர்ய விதைகள் குறித்து மரபு விதை சேகரிப்பாளர் பிரியா’ ராஜநாராயணன். பசுமைக்குடில் தொழில்நுட்பங்கள் குறித்து ரமணக்குமார், விற்பனை வாய்ப்புகள் குறித்து உதவி வேளாண்மை இயக்குநர் பிரபாகரன், நீர் மேலாண்மை குறித்து வேளாண் பொறியாளர் பிரிட்டோ ராஜ், பூச்சி மேலாண்மை குறித்து பூச்சியியல் வல்லுநர் நீ.செல்வம், இயற்கை விவசாயச் சான்று குறித்து விதைச் சான்று உதவி இயக்குநர் சுரேஷ், வட்டப்பாத்தி, இயற்கை இடுபொருள் தொடர்பாக விதைகள் யோகநாதன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் திட்ட இயக்குநர் குமார் துரைசாமி நன்றியுரையுடன் பயிற்சி நிறைவு பெற்றது.